“ஊனமுற்றோருக்குத் தேவைப்படுவது அன்பும், ஆதரவும் மட்டுமல்ல; வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகாட்டுதலும்தான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு தகவல் களஞ்சியம்தான் இந்தப் புத்தகம்” - ‘ஊனமுற்றோருக்கான கையேடு’ என்கிற இந்தப் புத்தகத்தின் அட்டையில் இருப்பது மேலே குறிப்பிட்ட வார்த்தைகள்தான்.
சத்தியமான உண்மை. ஊனமுற்றவர்களுக்கு பெரிதும் தேவை, அவர்கள் அந்த ஊனத்தை வெல்வதற்கான வழிகள்தானே தவிர நாம் காட்டும் பரிதாப உணர்ச்சிகள் அல்ல.. நம்மூரில் அட்வைஸிற்கும், அறிவுரைக்கும் பஞ்சமேயில்லை. ஆனால் வழி காட்டுதல் என்கிறபோதுதான் பாதிப் பேர் காணாமல் போய்விடுவார்கள்.
“ஒரு மீனை வாங்கிக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சாலச்சிறந்தது” என்பார்கள். அது போலத்தான் நீங்கள் ஊனமுற்றவரை பார்த்து எத்தனை, எத்தனை வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கோர்த்து ஆறுதல் சொன்னாலும், அது வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்கும் வழி காட்டுதலைப் போல வராது.
டாக்டர் சு.முத்துசெல்வக்குமார் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் என்னைப் போன்ற தேடுதல் வேட்டையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்களுக்கு மிக பயனுள்ளதாகும். (அதனால்தான் விமர்சனங்களுக்கான புத்தக லிஸ்ட்டில் இப்புத்தகத்தையே முதலில் தேர்வு செய்திருந்தேன்).
ஊனத்தில் மிகப் பெரிய ஊனம் என்னைப் பொறுத்தவரை பார்வையிழப்புதான். அந்த இழப்பிற்கு எவ்வளவுதான் நஷ்டஈடு கொடுத்தாலும் அது தகாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பார்வையற்றவர்கள் படிப்பதற்கான பிரெய்லி முறை பற்றியும், அதைப் பயிற்றுவிக்கும் முறைகள், நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் பயிற்சி முறைகள் பற்றி விலாவாரியாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
அரசு நிறுவனங்களில், அரசுப் பணிகளில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்றும், அதற்கான வழிமுறைகளையும் வேலையில் இட ஒதுக்கீடு என்ற பிரிவின் கீழ் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
மறுவாழ்வு அளிக்கும் மையங்கள் செயல்படும் விதங்கள் பற்றியும், அதில் பயிற்சி பெறுவது எப்படி என்பது பற்றியும், அதன் இந்திய அளவிலான முகவரிகளைக் குறிப்பிட்டும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
ஊனமுற்றோருக்கு பள்ளிக் காலத்தில் இருந்தே உதவித் தொகைகள் வழங்கப்படுவது இன்றைய தேதிவரையில்கூட பலருக்கும் தெரியாத விஷயம்தான். பள்ளிகளின் மூலமாகவே ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தொகைதான் யானைப் பசிக்கு சொளப் பொரி என்பதைப் போல் இருக்கிறது.
ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் ஊனமுற்றவர்களுக்கான விசேஷ சலுகைகளை பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். இதில் சறுக்குப் பாதைகள், பேட்டரி கார்கள், தனி ரயில் பெட்டிகள் என்று ஆசிரியர் சொல்லியிருப்பது சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தை மட்டும் மனதில் வைத்துச் சொல்லியிருக்கிறார் போலும்.. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்றுவரையிலும் சறுக்குப் பாதைகள் கிடையாது. அங்கு என்றில்லை.. தமிழகத்தில் 99 சதவிகித ரயில் நிலையங்களில் படிகளில் ஏறி இறங்கித்தான் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடக்க முடியாதவர்களை அவரவர் தோழர்களும், உறவினர்களும் தூக்கிக் கொண்டுதான் செல்கிறார்கள்..
ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதன் அமைப்புகள் மற்றும் செயல்படும் விதம், முகவரிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஊனமுற்றோருக்கு அன்பும், அரவணைப்பும் தாண்டி மிகவும் தேவைப்படுவது அவர்களது ஊனத்தை மறக்கடிக்க நினைக்கும் அளவுக்கான உபகரணங்கள்.
வெளிநாடுகளில் எத்தனை விதமான ஊனம் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் வித, விதமான உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அது நமது நாட்டில் மிகப் பெரிய பணக்கார வீடுகளில் மட்டுமே தெரிந்தவைகளாக உள்ளன. இன்னமும்கூட செயற்கைக் கால்கள் கிடைக்காமல் கட்டையை இருபுறமும் ஊன்றிக் கொண்டு நடக்கும் ஊனமுற்றவர்களை நாம் நிறைய பார்க்கலாம்.
ஊனமுற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளையும் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். சென்னையைச் சுற்றியே 29 பள்ளிகள் உள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம். மாவட்டந்தோறும், நகரந்தோறும் இருக்கும் இது போன்ற பள்ளிகளை பட்டியலிட்டுள்ளது பலருக்கும் நிச்சயம் பயன் தரும்.
ஊனமுற்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் என்னென்ன..? சலுகைகளைப் பெற என்ன செய்ய வேண்டும்..? எங்கு தொடர்பு கொள்வது..? சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் என்னென்ன..? இலவச உபகரணங்களைப் பெற என்ன வழி..? அரசின் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றியெல்லாம் மிக எளியத் தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கும் ஆசிரியர், அரசின் இந்தச் சலுகைகளைப் பெற வேண்டுமெனில் மிக முக்கியத் தேவையான ‘ஊனமுற்றோர்’ என்பதற்கான அடையாள அட்டை பெறும் வழியையும் அடையாளம் காட்டியிருக்கிறார்.
மாவட்ட மறுவாழ்வு மையங்களின் முக்கியப் பணியே உடல் ஊனமுற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்களைப் பற்றிய கணக்கெடுத்தலும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதலும்தான். அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பித்து இந்த அடையாள அட்டையைப் பெறும்படி அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.
இந்த மாதம் நான் செய்ய வேண்டிய தலையாய பணி எனக்கும் ஒரு அடையாள அட்டை பெறுதல்தான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்குக் கிடைத்துள்ள ஒரு நன்மை என்று இதனை எடுத்துக் கொள்கிறேன்..
என் போன்ற காது கேளாத குறைபாடு உடையவர்களுக்காக காது கேட்கும் கருவிகள் எங்கெங்கு கிடைக்கும் என்று ஒட்டு மொத்தமாகப் பட்டியலிட்டுள்ளார். புத்தகத்தை படித்து முடித்தவுடன் செய்த முதல் வேலை அந்தந்த கடைகளுக்கு போன் செய்து காதுக்கு பின்புறம் மாட்டக்கூடிய இலகுவான காது கேட்கும் கருவியின் விலையை கேட்டுத் தெரிந்து கொண்டதுதான். அது கொஞ்சம் காஸ்ட்லிதான்.. குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாயில் இருக்கிறது. அப்பன் முருகன் அருளால் பணம் சேர்ந்தவுடன் அதைத்தான் முதலில் வாங்க உள்ளேன்.
இப்போது உள்ளது கொஞ்சம் சிரமத்தைத் தருகிறது. ரெடிமேட் சட்டைகளை வாங்கினால் அதில் உள்பாக்கெட்டை அவசியம் தைக்க வேண்டி உள்ளது. மேலும் அடிக்கடி கை அனிச்சை செயலாக அந்த வயரை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கிறது. கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் கை, காலை எடுக்காமல் காதை மட்டுமே எடுத்தானே முருகன் என்ற நினைப்பில் நமக்கு பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்த குறைபாட்டால் எனக்குள்ள ஒரு குறை எனக்கு மிகவும் பிடித்தமான டீஷர்ட்டுகளை போடவே முடியவில்லை என்பதுதான். அவற்றுக்கு உள் பாக்கெட் தைப்பது மிகவும் கடினம் என்கிறார்கள் தையற்காரர்கள். மேலும் அது அதிக வெயிட்டை காட்டி தொந்தரவளிக்கிறது.. போகிறது.. அடுத்தப் பிறவியில் அனுபவித்துக் கொள்ளலாம்.
மிகக் குறைந்த வெறும் 60 ரூபாய் விலையுள்ள இப்புத்தகத்தை யாரேனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக நீங்கள் வாங்கிக் கொடுத்தீர்களானால், அது விலை மதிப்பில்லாத ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த அரியப் பணிக்காக ஆசிரியர் டாக்டர் சு.முத்துசெல்லக்குமாரும், இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள கிழக்குப் பதிப்பகமும் என்றென்றும் என்
நன்றிக்குரியது.
.