onsdag 6. februar 2013

உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா



உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு வரலாற்றுப் புகழ்மிக்கதும், உலகின் எட்டாவது அதிசயம் எனக் கருதப்படுவதுமான சிகிரியா, நட்சத்திரங்கள் நிலை கொண்டுள்ள அமைப்பை அனுசரித்து (location of stars) நிர்மாணிக் கப்பட்டிருப்பதாகவும் எகிப்து நாட்டின் “பிரமிட்” கோபுர தொழில் நுட்ப அமைப்பை ஒத்ததாக சிகிரியா அமைந்துள்ளமை இதன் மூலம் புலனாவதாகவும் இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நட்சத்திர உயிரியல் விஞ்ஞானக் கல்விப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹ தெரிவித்தார். அண்மையில் பொலன்னறுவை - அரலகங்வில பிரதேச வயல் வெளியொன்றில் விழுந்ததாகக் கூறப்படும் எரி நட்சத்திரச் சிதைவுகளை பரிசோதனைக் குட்படுத்தும் நோக்கில் அப்பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹ 31 ஆம் திகதி சீகிரியாவில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீகிரியாவுக்கு தான் பல தடவைகள் சென்றிருப்பதாகத் தெரிவித்த பேராசிரியர், எகிப்து நாட்டின் பிரமாண்டமான பிரமிட் கோபுரங்களைப் போன்றே, இலங்கையில் சீகிரியா குன்றமும் நட்சத்திர அறிவியல் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், வடகிழக்குத் திசையை நோக்கி சிகிரியா அமைக்கப்பட்டிருப்பதானது, நட்சத்திர அமைப்பினை அனுசரித்தே என்பது இதன் மூலம் நிரூபணமாவதாகவும், இது உள்ளத்தை ஈர்ப்பதான ஓர் விடயமெனவும் தெரிவித்தார்.

இவ் ஆய்வுச் சுற்றுலாக் குழுவில் இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழக, நட்சத்திர உயிரியல் விஞ்ஞானக் கல்விப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்ஹவின் தலைமையில் அமெரிக்கா - நாஸா ஆய்வு நிலையத்தின் முன்னாள் நட்சத்திர உயிரியல் விஞ்ஞானி சியலும் பொலிஸ், மற்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழக நீரியல் வளத்துறை சார்ந்த விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் பீ. ஹுவர், ஜப்பான் நாட்டின் நட்சத்திர ஆய்வு நிபுணர் பேராசிரியர் நூரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் நாட்டில் சில இடங்களில் பெய்ததாகக் கூறப்படும் சிவப்பு, மற்றும் மஞ்சள் நிற மழை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ் ஆய்வுக் குழுவினர், சிகிரியா குன்றத்தின் உச்சியிலமைந்துள்ள நீர்த் தடாகத்திலிருந்து பரிசோதனைக்கென மாதிரி நீரையும் தம்முடன் எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-தினகரன்

Ingen kommentarer:

Legg inn en kommentar