torsdag 24. januar 2013

மீன்மகள் ஏங்குகின்றாள் வாவிமகள் வாடுகின்றாள்…..!!! – படுவான்கரையான்.



 “ஆரியர்போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்த வளர்புகழும்
ஏரால் இயன்றசெந்நெல் இன்சுவைதீங் கன்னலொடு
தெங்கி னிளநீரும் தீம்பலவி னள்ளமிர்தும்
ஏங்குங் குறையா இயலுடைய நன்னாடு
மட்டக் களப்பென்னும் மாநாடு……..”

என்று புகழ்ந்து பாடப்பட்ட மட்டக்களப்பு தமிழகம் திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையாக மகாவலிகங்கை பாய்ந்து செல்கின்றது. வெருகல் கங்கையிலிருந்து தெற்காக சுமார் நூற்றுஐம்பது மைல் நீளமாக குமுக்கன் ஆறுவரையும் வங்காளக்கடலையும் கிழக்கு மேற்காக நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நான்கு வகையான நிலங்களையும் தன்னகத்தே கொண்டு எழில்மிக்க செல்வச்சிறப்புமிக்க நாடாக விளங்குகின்றது. மட்டக்களப்புமாநிலத்தினை மடடக்களப்புவாவிமகள் எழுவான்கரை படுவான்கரை எனஇரண்டாகப்பிரித்து எழில்கொஞ்சும் இளவேனிற் காலநிலையயை தினமும் காலை மாலை காட்சிகளாக இங்குவாழும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து இன்புற்றிருக்கின்றாள். பஞ்சம் பட்டினி அறியாது நெல்லுக்கோ மீனுக்கோ தேனுக்கோ தினைக்கோ யாரையும் நம்பியிராது தங்கள் மண்ணிலே உழுதுண்டு வாழும் உயர்ந்த மக்கள்தான் கிழக்கில் பிறந்தமக்கள்.

இலங்கையில் கடந்த 30வருடங்களாக இடம்பெறும் காலமாற்றம் அரசியல் மாற்றம் என்பனவற்றிற்கு கிழக்குமாகாணமும் தப்பிவிடவில்லை. விடுதலைப்போராட்டமாக உருவெடுத்து பல மாறாத கொடுமைகளையும் சூறாவழியாகவந்து ஆறாத வடுக்களையும் சுனாமிப்பேரலையாகித் தேறாத சுமையையும் நம்மக்களுக்கு தந்து சென்ற நிலையிலே இன்றுஅகதியாக ஆதரவற்று அல்லோலகல்லோலப்படும் நம்இரத்தங்களின் நிலைகண்டு நாம்வாழாதிருப்பது கொடுமையிலும் கொடுமை.

எவ்வளவுதான் கொடுமைகளும் சோதனைகளும் அழிவுகளும் வந்தாலும் 95 வீதமான கிழக்குமக்கள் இன்றும் தங்கள் மண்ணைவிட்டகலாத மண்ணின் மைந்தர்களாக அங்கிருந்து எந்தக் கொடுமைகளையும் எதிர்த்து நின்று போராடி வாழ்வதை நினைக்கும்போது அவர்ளை நாம் என்னவென்ற போற்றுவது. தமிழ்நாட்டிற்கோ ஐறோப்பாவிற்கோ ஓடும் அளவிற்கு அவர்களது மண்பற்று இன்னமும் விட்டுப்போகவில்லை.

கடந்தவருடம் ஆகஸ்டில் சம்பூரில் தொடங்கிய இடப்பெயர்வுகள் படுவான்கரை வரை கிழக்குமக்களின் வாழ்வில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கு மிடையிலான பலப்பரீட்சையில் தங்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழும்சூழல் இன்றி தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு ஆறுதல்கூற யாரும் அற்றநிலையை எண்ணி மட்டக்களப்பு வாவிமகள் கண்ணீர்வடிக்கின்றாள். ஆனந்தவெள்ளத்தில் அள்ளிவிளையாடிய வாவிமகள் ஆதரவற்று அகதிகளாக ஓடிவரும் படுவான்கரைமக்களின் கண்ணீரால் பெருக்கெடுக்கின்றாள்.

வந்தாரைவாழவைத்து அவர்கள் வாழ்வதறகு இடம்கொடுத்து தங்கள் வளத்தைக் கூடஅபகரித்து சென்றவர்களையும் மன்னித்து விருந்தோம்பலில் சிறந்துவிளங்கிய கிழக்குமக்களின் அவலம் இன்று ஐக்கியநாடுகள் சபை வரை போய்விட்டது. புலம்பெயர் தமிழர்கள் வாகரை இடம்பெயர்வில் தொடங்கி இன்றுவரை நடைபெற்றுவரும் இந்த அவலமானநிலைக்கு ஆறுதல் அளிக்க முன்வராதது அவர்களின் நாட்டுப்பற்றையும் தேசிய, பிரதேசப்பற்றையும் கேள்விக்குறியாக்கி நிற்கின்றது.

காலம்காலமாக ஒருதாய் பிள்ளகைளாக தமிழர்களோடு முஸ்லீம்களும் சிங்களவரும் ஒன்றாகவாழ்ந்த நாடு மட்டக்களப்புநாடு. இடையிடையே பல துவே~ அரசியல்வாதிகளாலும் தமிழத்தேசியம் என்றபுல்லுருவிகளாலும் அவ்வினங்களுக்கான உறவுமுறையினை பகடைக்காயக்கி பந்தாடிய காலமும் உண்டு. இருந்த போதும் சூறாவளியின் போதும் சுனாமியன் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாத பகுதிகளில் வாழ்ந்த ஏனைய மக்கள் இனமத பாகுபாடின்றி உணவு உடைகளை வழங்கியதுடன் அவர்களின் துன்பத்திலும் பங்குகொண்ட உண்மைச் சம்பங்கள் நாம் அறிந்ததே. இன்று படுவான்கரைமக்களின் இடப்பெயர்வால் காத்தான்குடி வாழ்முஸ்லீம்மக்கள் செய்யும் சேவைகள் இலங்கைத் தமிழர்களைமட்டுமன்றி குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை முக்காடு போடவைத்துள்ளது.

காத்தான்குடியிலே வெள்ளிக்கிழமையன்று இறைவனை வணங்கிய அப்பாவிமுஸ்லீம்களை ஈவிரக்கமின்றி பள்ளிவாசலில்வைத்து சுட்டுத்தள்ளிய அரக்கர்களாலே கடந்த கால்நூற்றாண்டாக இன்னல்பட்டு வாழ்ந்த மக்கள் இன்று தங்கள் சொத்திழந்து சுகமிழந்து உடுக்க ஆடையின்றி இருக்க வீடின்றி தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவளித்து உணவுபரிமாறும் முஸ்லிம்களக்கு மட்டக்களப்புமக்கள் என்றென்றும் நன்றிக்கடமைப் பட்டவர்களாவர்.

புலம் பெயர்ந்து வாழும் கிழக்குமக்களே! காலம் கடந்துவிடவில்லை நம்மக்களுக்கு நாம்செய்யவேண்டிய கடமை இன்றுஎமக்குள்ளது. அவசர உதவிகளைக் கூடசெய்யமுடியாத நிலையில் அங்குள்ள தொண்டர் நிறுவனங்கள் பலசிக்கல்களுக்குள்ளாகியள்ளனர் அரசாங்கமும் அடிப்படைத்தேவைகளை தாமதமின்றி வழங்குவதாக தெரியவில்லை. அகதிளாக தஞ்சமடைந்து மட்டக்களப்பு ரவுணுக்கு வந்துள்ள படுவான்கரை மக்களின் மனிதப்பேரவலத்தை தடுக்கும்வகையில் இருப்பிடவசதி உணவுவசதி சுகாதாரவசதிகளுக்காகவும் தாமதமின்றி உதவிசெய்யுங்கள். காத்தான்குடி மக்கள் வீட்டிற்கு நூறு ரூபாய் கொடுக்கும் போது நீங்கள் 100 யூரோக்கள் அல்லது 100 டொலர்களை கொடுப்பதற்கு ஏன்தயங்குகின்றீர்கள்? இங்குவாழும் உங்கள் உறவினர் மூலமாக நீங்கள் தனித்தனியாக இந்த உதவியைச் செய்யலாம். சுமார் 15000 குடும்பங்களைச் சேர்ந்த 120000 பேர் தற்போது களுவான்சிக்குடி முதல் வாழைச்சேனை வரை அகதிகளாகவுள்ளனர்;. கிழக்கிலிருந்து சுமார் 75000 உறவுகள் ஐறோப்பா அவுஸ்திரேலியா கனடா அமெரிக்காவென புலம்பெயர்ந்து வாழுகின்றார்கள். கூட்டிப் பெருக்கி பார்த்தீர்களென்றால் அங்குள்ள மக்களின் தற்போதய தேவைகளை வேறுஎந்த உதவியுமின்றி உங்களால் மட்டும் தனியாகசமாளிக்க முடியும். தற்போது நம்இரத்த உறவுகள் அல்லல்பட்டு அவதியுறும்போது உதவாத கிழக்குமாகாணத்தான் மீண்டும் அங்கு சென்று அம்மண்ணின் தண்ணீர் குடிப்பதற்கு அருகதையற்றவர்கள். தற்போது கணக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும் செய்யவேண்டியவர்கள் நீங்கள்தான்.

Ingen kommentarer:

Legg inn en kommentar